திங்கள், 31 மே, 2021

சிந்தனைக்கு ...

“நீர் சுழற்சியும், வாழ்க்கை சுழற்சியும் ஒன்றுதான் என்பதை நாம் மறக்கிறோம். நீர் நிற்காது, ஓடிக்கொண்டே இருக்கும். உங்கள் கையை அதனுள் அமிழ்த்தும்போது, வருடலை தான் உணர்வீர்கள். நீர் திடமான சுவர் கிடையாது. அது உங்களைத் தடுக்காது. ஆனால், நீர் எப்போதுமே அது செல்ல விரும்பும் இடத்திற்கு சென்று கொண்டே தான் இருக்கும், இறுதியில் அதற்கெதிராக எதுவுமே நிற்க முடியாது. நீர் பொறுமை நிறைந்தது. துளித்துளியாய் விழும் நீர் ஒரு கல்லை பெயர்க்கும். இதை நினைவு கொள், அன்பே. நீ பாதி நீராலானவன்/ள் என்பதை நினைவு கொள். ஒரு தடையின் வழியே செல்ல முடியவில்லை என்றால், அதை வளைவுகளில் சுற்றிச் சென்று கட, நீர் அதை தான் செய்யும்.”

செவ்வாய், 29 டிசம்பர், 2020

பூமியின் ஒவ்வொரு குழந்தையுமே அவர்களுக்கே உரியதான உள்ளுணர்வுகளுடன் பிறப்பவர்கள்...

"பூமியின் ஒவ்வொரு குழந்தையுமே அவர்களுக்கே உரியதான உள்ளுணர்வுகளுடன் பிறப்பவர்கள். காரண அறிவுக்கு அப்பாற்பட்ட ஒரு அறிதல், அவர்களை ஆழ்ந்த ஞானத்தில் நேரடியாக வேர்கொள்ள வைத்து, 'உண்மையில் நான் யார்?' என்ற பேருண்மையோடு இணைக்கிறது. உண்மையை அறிந்தே உலகில் ஒவ்வொரு குழந்தையும் பிறக்கிறது. குழந்தைகளின் பெற்றோர் மற்றும் கவனிப்பாளர்கள் என்ற வகையில் நாம் செய்ய வேண்டியது என்னவென்றால், குழந்தைமனதுக்குள் உள்ளுணர்வு எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் புரிந்துகொள்வதோடு, நம் குழந்தைகளின் உள்ளார்ந்த அன்புறவை வளர்ப்பதும் ஆகும். மேலோட்டமாகப் பார்த்தால் எளிதாகத் தோன்றும் இது, உண்மையில் நிறைய வாழ்வனுபவங்களுக்குப் பிறகே நமக்குக் கிடைக்கிறது.உள்ளுணர்வை நிராகரித்த உலகறிவு என்பது ஒரு குழந்தையை ஊனப்படுத்துவதற்குச் சமம்” - ஜூலி ஹாமில்டன் (Generation Intuitive புத்தகத்தின் ஆசிரியர்) குழந்தைகளுலகம் என்பது அவர்களுக்கு உரியதான சிறுசிறு கனவுகளும் நம்பிக்கைகளும் நிறைந்த பேருலகு. மொழிகளைத் தாண்டிய அறிதலுணர்வை பெரியவர்களாகிய நாம் அடைந்திடத்தான், உண்மையில் ஒவ்வொரு குழந்தையும் பாடாய்ப்படுகிறது. எப்படியாவது தங்களுலகத்தின் தாழற்ற கதவுகளைத் திறந்துகாட்டி, பெரியவர்களை மீண்டும் குழந்தைகளாக்கிவிட முடியாதா என ஏங்கித்தவித்து மெனக்கெடுகிறார்கள். நமக்குள் இருக்கும் ரகசியக்குழந்தையை குழந்தைகள் வெகுசீக்கிரமாகவே கண்டுபிடித்துவிடுகிறார்கள். மகிழ்வாக இருப்பதற்குத் தடையான அனைத்திலிருந்தும் மனதை விலக்கிக்கொள்வது சிறாரியல்பு. குழந்தைகளுக்காகப் பெரியவர்கள் படைக்கிற அத்தனைக் படைப்புகளுமே "நாங்கள் எங்களுள் வாழும் குழந்தையை இன்னும் இழந்துவிடவில்லை" என்பதைச் சொல்கிற மனமுதிர்வுதான். கதை, ஓவியம், இசை, சிற்பம் என ஒவ்வொரு கலையிலும் அந்த உண்மையைத்தான் நாம் கதறியழுதோ அல்லது சிரித்துமகிழ்ந்தோ உரக்கச் சொல்கிறோம். குழந்தமையின் நுனியைத் தீண்டிவிட்ட ஒரு படைப்பு காலத்தால் உச்சம் கொள்வதற்கான அகக்காரணம் அதுதான். "பிங்க் கலரு பிங்க்காவே இருந்தா அதுக்கு போரடிக்காதா?" எனக் கேட்கிற ஒரு குழந்தையின் உள்ளுணர்வு திறக்கிற ஜீவவெளி என்பது, நிறங்களுக்குள் வாழ்கிற அழியாதப் பேரிறைக்கு அக்குழந்தை தருகிற அனிச்சை முத்தம். அத்தகையதொரு அனிச்சை முத்தத்தை குழந்தைகளிடமிருந்து பெரியவர்களுக்குப் பெற்றுத்தந்துவிடும் தணியாக்கனவோடு தும்பி இதழின் ஒவ்வொரு காகிதப்பக்கமும் வடிவேற்கிறது. கதை என்பது ஒரு திறவி. யதார்த்தத்திற்கும் கனவுக்கும் இடைப்பட்ட தடைக்கதவைத் திறப்பதோடு அத்திறவி தன்னை நிறுத்திக்கொள்கிறது. அதன்பின் நிகழ்வதெல்லாம் உள்ளுணர்வின் பாய்ச்சல். உண்மையில் ஒரு கதை துவங்குவது குழந்தையின் உள்ளுணர்வில்தான்! சில செயல்களின் இலக்குகள் தோற்றால்கூட நமக்கு நம்பிக்கை தருபவை. குழந்தையின் உள்ளுணர்வையும் கற்பனையையும் அறிய முயன்று தோற்பதிலும்கூட தும்பி தன் அகநிறைவை அடைகிறது.

ஞாயிறு, 29 ஜனவரி, 2012

மீண்டும் மழலையாக பிறந்திட வேண்டும்...

தீய்க்கும் சோகங்களை கடந்து
உயிரை பிதுக்கும் வலிகளை தாண்டி 
இன்பம் துன்பம் கோபம் ஆத்திரம்...
எல்லாவற்றையும் நகர்த்தி விட்டு...

என் நினைவுப் பறவை...
காலச் சக்கரத்தை பின் நோக்கி பார்க்க பறந்திட
என் எண்ணச் சிறகுகள் மெல்ல மெல்ல விரிகின்றது.

ஆம்...!
என் தாய் மடியில் தலை சாய்த்து துயின்ற நாள்..
அன்னை அவள் அரவணைப்பில் இன்பங்களை
மட்டும் நுகர்ந்த பொழுதுகள்..
சோகங்கள் எனைத் தீண்டி விடமால்
கண் இமைக்காமல் அல்லும் பகலும்
அயர்ந்திடமால் அன்பாய் பார்த்திட்ட அன்னை..
குட்டிப் பட்டாம் பூச்சியாய் மண்ணில் வட்டமடித்து
வாழ்க்கையை ரசித்த மழலைப் பொழுதுகள்...
கண் முன்னே எட்டிப் பார்க்க
கண்களில் கண்ணீர் முட்டி மோதுகின்றது...

என் அன்னையவள் அரவணைப்பிலிருந்து பிரிந்து
வந்து தனிமையில் பொய் முகங்கள் ஏது..?
உண்மை முகங்கள் ஏது ?- என்று
அறியாமுடியாமல் இன்னும் மனதால்
மழலையாக வாழ்ந்து கொண்டு இருக்கின்றேன்..

சோகங்கள் அறியாது இன்பங்கள் மட்டும் நுகரும்
போட்டி பொறாமை வஞ்சகம் சூழ்ச்சி அறியாத
பாசங்கள் மட்டும் புரிந்த அந்த மழலையாக நான்
மீண்டும் பிறந்திட வேண்டும்........
என் அன்னை அவள் மடியில்
சுகமாய் துயின்றிட வேண்டும்.....

புதன், 30 நவம்பர், 2011

உளறல் 43

இவ்வுலகில் வாழும் வரை எந்தவோர் எதிர்பார்ப்புமின்றி வாழ இறுதிக்கட்ட போராட்டத்தில் நுழைந்திருக்கிறேன் என்றே கருதுகின்றேன்...

வினைகளின் பலனில் பற்றின்மை என்பது சிறிது சிறிதாக ஏற்படுவதை அவ்வப்போது உணர முடிகிறது....

இதன் முடிவு தெரியவில்லையெனினும் என்னைப் பொருத்த வரையில் நான் சரியான வழியில் சென்றுகொண்டிருக்கிறேன் என்றே கருதுகின்றேன்...

இதுநாள் வரை இவ்வுலக வாழ்க்கையில் நான் பெற்றதை விட இழந்ததே அதிகம் என நினைத்திருந்தேன்.

ஆனால் இன்றோ நான் இழந்தது அனைத்தும் நன்மைக்கே என்பதை ஓரளவு உணர முடிகிறது; இனி இழக்கப் போவதும் நன்மைக்கே என்றே உணர்கின்றேன்...

இப்பொழுதெல்லாம் நான் மற்றவர்கள் என்னைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கவில்லை. அவர்கள் எவ்வளவு முயன்றாலும் அவர்களுடைய பக்குவத்தின் அளவில்தான் சிந்தனையும் இருக்கும் என்பதை நன்கு உணர்ந்துள்ளேன். எனவே யாரையும் குறை கூறுவது என்பது எனக்குப் பிடிக்காத ஒன்றாகிவிட்டது. எனக்குத் தேவை எவை என்பதை மட்டும் மற்றவர்கள் நேரம் வரும் போது தாமாகவே புரிந்து கொள்ளட்டும். அதுவரை அமைதியாகவே வாழ்க்கையைத் தொடர முயல்கின்றேன்.

அவரவர் அவரவரின் நிலைக்கேற்பவே செயல்படுவர். செயலின் பலனும் அதற்கேற்பவே அமையும் என்பதை அவர்கள் தாமாகவே உணர்வர். எனவே இதில் எனது முயற்சிகள் என்று எவையும் தேவைப்படா என்றே கருதுகின்றேன்.

இறைமையை நம்பாதவர்கள் கூட இயற்கை விதியை நம்பித்தான் ஆக வேண்டும். இதில் பார்வை வேறே தவிர பொருள் என்பது ஒன்றுதான். உலக இயக்கத்தில் அனைத்தும் நேர்த்தியாக நடக்கிறது என்பதைக் கண்கூடாகப் பார்த்தே இதைத் தெளிந்து கொள்ளலாம். ஆனால் பார்வையில்தான் ஆழம் வேண்டும். பக்குவம் உயரும் போது பார்வையின் ஆழமும் தானே உயரும்.

தன்னிறைவுக்காக வாழ்வதே மனித வாழ்க்கை; பிறருக்காக வாழ்கின்றோம் என்பது ஒரு பொய்த் தோற்றம்.

நமது வாழ்க்கை வேண்டுமாயின் பிறருக்குப் பயனாக அமையலாம். ஆனால் நாம் நமது நிறைவுக்காவே வாழ்கின்றோம் என்பதுதான் உண்மை நிலை...

விட்டுக்கொடுத்தவர்களுக்குக் கூட நான் விட்டுக்கொடுத்தேன் என்றவொரு  மகிழ்ச்சி கிடைத்திருக்கும்; அதுவே நான் கூறும் தன்னிறைவாகும்.

எனவே,
நாம் நமக்காகத்தான் வாழ்கின்றோம் என்பதே உண்மை!

ஞாயிறு, 27 நவம்பர், 2011

உளறல் 42

இன்றைய சூழலில் மிக அமைதியாக இருக்க வேண்டிய அவசியத்தை உணர்கிறேன்...

ஆழ்ந்த சிந்தனை என்னைப் பொறுமையாக செயல்பட வைத்துக்கொண்டிருக்கிறது...

எழுதுவதற்கு நிறைய விடயங்கள் இருப்பினும் மனம் எதையும் எழுத மறுக்கின்றது...


இங்கு எழுதுவது ஒரு தன்னிலை விளக்கமே!

இதனால் மற்றவர்களுக்குப் பயன் கிட்டும் என்ற எண்ணம் எனக்குத் துளியும் கிடையாது...
 
உயர்வையும் உண்மையையும் போற்றும் மனிதன் அவற்றை அன்றாட வாழ்வில் கடைப்பிடிப்பதில் மட்டும் தோல்வியுறுகின்றான்...


வாழ்க்கையின் எல்லா நிலையிலும் மனிதன் மகிழ்ச்சியைத் தேடுவதையும் அடைவதையுமே நோக்கமாகக் கொண்டிருப்பது இயல்பான ஒன்றுதான்...

சிவஞானம் தேடும் ஞானியரும் பேரின்பத்தைத் தேடியே தங்களின் தவத்தை மேற்கொள்கின்றனர்...

ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் ஒருமையுளராகி உலகியல் நடத்தல் வேண்டும் என்ற வள்ளலாரின் ஒருமைப்பாட்டுச் சிந்தனை ஓர் அழகிய கனவுதான் என்ற எண்ணமே வலுப்படுகிறது...


உலகிற்குத் தம்மைத் துறவி என அடையாளம் காட்ட விவேகானந்தருக்குக் கூட காவி உடை தேவைப்பட்டது என்பது எனக்கு வியப்பையே அளிக்கிறது...


மற்றவர்களில் நான் வேறுபட்டவன் என்பதைக் காட்டுவதற்கும் ஓர் அடையாளம் தேவை என்பதுதான் உலக நியதியா?


அனைத்தையும் துறப்பதுதான் துறவு எனின் எதையோ ஒன்றை எதிர்பார்த்துத் தவம் மேற்கொள்வது துறவாகுமா?


எது நமக்குக் கிடைக்க வேண்டுமோ அஃது இறையருளால் திண்ணமாகக் கிடைக்கும் என்பதை உணர முடிகிறது...

எதிர்பார்ப்புக்கள் இருக்கும் வரை ஏக்கங்கள் இருக்கும்; ஏக்கங்கள் இருக்கும் வரை உளப்போரட்டங்கள் தொடரும்; உளப்போராட்டங்கள் தொடரும் வரை உலக வாழ்க்கையில் முழுமையான மகிழ்ச்சியை அடைய முடியாது.


எனவே, தொடங்கிய இடத்தில் முடிவதும் முடிந்த இடத்திலிருந்து தொடங்குவதும்தான் வாழ்க்கை என்பதை உணர முற்பட்டால் நமக்கு முதலும் தெரியும்; முடிவும் தெரியும்.


மனித உறவுகள் என்பன தொடக்கம் முதல் இறுதி வரை ஒரே நிலையில் இருக்கும் என்ற எதிர்பார்ப்புத் தவறானது என்பதை ஒவ்வொருவரும் உணரும் காலம் வரும்...


அதுவரை மனிதர்களின் உளப்போராட்டங்கள் தொடரும் என்பதும் ஓர் எழுதப்படாத விதியே!


மாற்றம் என்ற சொல் மட்டுமே இறுதி வரை மாற்றம் பெறாமல் இருக்கும்; மற்ற அனைத்துமே மாற்றம் காணும் என்பதுதான் இயற்கை விதி...


மாற்றங்கள் ஒரு முடிவை எட்டும் வரை என்னால் எந்தவொரு இறுதி முடிவிற்கும் வரமுடியவில்லை...

எனவே, நான் காத்திருப்பதும்  இயற்கையான முடிவிற்கே...

 

வியாழன், 17 நவம்பர், 2011

என்னைக் கவர்ந்த குறுந்தொகைப் பாடல்...

எட்டுத் தொகை நூல்களும் பத்துப் பாட்டு நூல்களும் சங்ககால இலக்கியங்களாகத் திகழ்கின்றன. இவை சங்ககால மக்களின் காதல், வீரம், கொடை, செங்கோல் மாண்பு, மெய்யறிவு சிந்தனை முதலான இன்னோரன்ன அம்சங்களைப் பாடுகின்றன. காலத்தால் அழியாத அரும் பொக்கிஷங்களாகத் திகழும் இப்பாடல்களின் இலக்கியச் சுவையை நுகர்ந்து அனைவரும் இன்புற வேண்டும் என்பது எமது அவா. அந்த வகையில், குறுந்தொகைப் ...பாடல் ஒன்றை இங்கு தருகின்றேன்:

குறுந்தொகைப் பாடல் : எண் நாற்பது.
ஆசிரியர் செம்புலப்பெயனீரார்.
திணை - குறிஞ்சி / தலைவன் கூற்று

யாயும் ஞாயும் யாராகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே!

பொருள்: என்னுடைய தாயும் உன்னுடைய தாயும் முன்பின் அறிமுகமானவர்கள் அல்லர். என் தந்தையும் உன் தந்தையும் எவ்வகையிலும் உறவினர்களுமல்லர். நானும் நீயும் இதுவரைகாலம் ஒருவரை ஒருவர் அறிந்திருக்கவும் இல்லை. எனினும், செம்மண் நிலத்தில் பெய்த மழைநீர் எவ்வாறு உருமாறி பிரித்தறிய முடியாதபடி, மண்ணின் தன்மையோடு இரண்டறக்கலந்து விடுமோ அதுபோல இந்தக் கணத்தில் நம் இருவருடைய உள்ளங்களும் ஒன்று கலந்து விட்டனவே!

இப்பாடலிலே, கண்டவுடன் காதல் வசப்பட்டுவிட்ட தலைவனினதும் தலைவியினதும் மனவுணர்வு அழகிய உவமை ஒன்றினூடே வெகு இலாகவமாகச் சித்திரிக்கப்பட்டுள்ளது. முதற் பார்வையிலேயே ஆண்டாண்டு காலம் ஆழ்ந்து பழகியதான உணர்வு எழுந்துவிட்டதை, செம்மண் நிலத்தில் பெய்த மழைநீர் தானும் செந்நிறம் கொண்டு பிரித்தெடுக்க முடியாதவாறு கலந்துவிடுவது போல, அன்புகொண்ட உள்ளங்கள் இரண்டும் இரண்டறக் கலந்துவிட்டனவே என்று வியப்புணர்வோடு தலைவன் பாடுவதாக அமைத்துள்ளார், புலவர். பிற்காலத்தில் இப்பாடல்களைத் தொகுத்தவர்கள் புலவரின் பெயர் தெரியாததால் அவரை, "செம்புலப் பெயனீரார்" என்று அவர் கையாண்ட உவமையினையே காரணப் பெயராகக் கொண்டு பதிவுசெய்தமை, இந்த மனதை அள்ளும் உவமைக்குக் கிடைத்த சிறப்பு என்பதில் ஐயமில்லை அல்லவா?

வியாழன், 10 நவம்பர், 2011

உளறல் 41

நான் மனிதர்களை விட்டு அதிகம் விலகுகிறேன் என்பதை உணர்கின்றேன்...

இப்பொழுது உண்மைகள் எனக்குத் தெளிவாக உணர்த்தப்படுகின்றன என்பதை ஓரளவு உணரத் தொடங்கி விட்டேன்...

உண்மைகள் தெளிவாகத் தெரியும் போது அனைத்தையும் உதறிவிட முடியும்.
ஏனெனில் மற்றவை அனைத்தும் அந்நேரத்தில் பொருளற்றவையாகி விடுகின்றன...

வாழ்க்கை முழுமையும் நாம் மகிழ்ச்சியைத் தேடியே அலைகின்றோம்.
நமக்குக் கிடைக்கும் மகிழ்ச்சி, நமக்கு வாழ்க்கையைப் பற்றிய மறைப்பையே ஏற்படுத்துகின்றன என்பதனை மனிதன் உணராதிருக்கும் வரை அவன் வாழ்க்கை ஒரு நீண்ட தொடர்கதையே!

உலக வாழ்க்கையில் நிறைவு என்பது முழுமையாகக் கிடைக்காது என்பதே உண்மையாகும். எனவே உலகப் பற்றுகளை முழுமையாகத் துறக்கின்றவனே நிறைவை நோக்கிச் செல்ல முடியும்...

இது முயற்சியாலும் பயிற்சியாலும் கிடைக்காத ஒன்று; இறையருளால் இயற்கையாகக் கிடைக்கும்.

இந்த உலக வாழ்க்கையில் நாம் இருக்கும் வரை மற்றவர்களை நிறைவு படுத்த போலியாக வாழ வேண்டிய சூழல் ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது...
போலியை வெறுக்கும் மனம் வாழ்க்கையிலிருந்தும் விலகி நிற்க கற்பிக்கிறது என்ற உண்மையை உணர முடிகிறது...

இதன் முடிவு தெரியவில்லையெனினும் உண்மையைத் தேடும் முயற்சியும் எம்மிடம் இல்லை...

உணர்த்தப்பட வேண்டிய நேரத்தில் உண்மைகள் உணர்த்தப்படும் என்பதால் உண்மையின் வரவுக்காக அமைதியாகவே காத்திருக்கிறேன்...

அவரவர் சிந்தனைக்கு ஏற்பவே வாழ்க்கை அமையும் என்பதால் மற்றவர்களின் வாழ்க்கையின் போக்கை நம்மால் தீர்மானிக்க இயலாது என்ற உண்மையை உணர்ந்தாலும் நாம் இருக்கும் வரை,
உலகம் பயனுற வாழ முடியவில்லையெனினும் ஒரு சிலராவது பயனுற வாழ வேண்டும் என்ற எண்ணமே மேலோங்குகிறது...

சிந்திக்கத் தெரிந்த மனிதனால்தான் வாழ்க்கையின் உண்மையான பாதையில் செல்ல முடியும்...

நம்மால் வழி காட்ட முடியும்; இயலுமாயின் சிறிது தூரம் அவர்களுடன் சென்று வழி காட்டலாம்; இறுதி வரை அவர்களுடன் செல்ல இயலாது.

அவர்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு அவர்களே செல்ல வேண்டும் என்பதே இயற்கையின் நியதியாகும். வழிகாட்டிகள் வழியைக் காட்டுமே தவிர நம்மைக் கொண்டு போய் சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்க்காது என்பதை அனைவரும் உணர வேண்டும்...

எனவே, சிந்திக்கும் மனிதனே வாழத் தொடங்குகின்றான் என்ற உண்மை நமக்குத் தெரியும் வரை நாம் வாழவில்லை என்பதை உணர்ந்து கொள்வோம்.

உயர்வான சிந்தனை மனிதனுக்கு வாழ்க்கையில் நிறைவைத் தரும் என்பதால் நமது சிந்தனையும் உயர்வை நோக்கியே இருக்க வேண்டும்...

சிந்தனைக்கு ...

“நீர் சுழற்சியும், வாழ்க்கை சுழற்சியும் ஒன்றுதான் என்பதை நாம் மறக்கிறோம். நீர் நிற்காது, ஓடிக்கொண்டே இருக்கும். உங்கள் கையை அதனுள் அமிழ்த்து...