புதன், 30 நவம்பர், 2011

உளறல் 43

இவ்வுலகில் வாழும் வரை எந்தவோர் எதிர்பார்ப்புமின்றி வாழ இறுதிக்கட்ட போராட்டத்தில் நுழைந்திருக்கிறேன் என்றே கருதுகின்றேன்...

வினைகளின் பலனில் பற்றின்மை என்பது சிறிது சிறிதாக ஏற்படுவதை அவ்வப்போது உணர முடிகிறது....

இதன் முடிவு தெரியவில்லையெனினும் என்னைப் பொருத்த வரையில் நான் சரியான வழியில் சென்றுகொண்டிருக்கிறேன் என்றே கருதுகின்றேன்...

இதுநாள் வரை இவ்வுலக வாழ்க்கையில் நான் பெற்றதை விட இழந்ததே அதிகம் என நினைத்திருந்தேன்.

ஆனால் இன்றோ நான் இழந்தது அனைத்தும் நன்மைக்கே என்பதை ஓரளவு உணர முடிகிறது; இனி இழக்கப் போவதும் நன்மைக்கே என்றே உணர்கின்றேன்...

இப்பொழுதெல்லாம் நான் மற்றவர்கள் என்னைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கவில்லை. அவர்கள் எவ்வளவு முயன்றாலும் அவர்களுடைய பக்குவத்தின் அளவில்தான் சிந்தனையும் இருக்கும் என்பதை நன்கு உணர்ந்துள்ளேன். எனவே யாரையும் குறை கூறுவது என்பது எனக்குப் பிடிக்காத ஒன்றாகிவிட்டது. எனக்குத் தேவை எவை என்பதை மட்டும் மற்றவர்கள் நேரம் வரும் போது தாமாகவே புரிந்து கொள்ளட்டும். அதுவரை அமைதியாகவே வாழ்க்கையைத் தொடர முயல்கின்றேன்.

அவரவர் அவரவரின் நிலைக்கேற்பவே செயல்படுவர். செயலின் பலனும் அதற்கேற்பவே அமையும் என்பதை அவர்கள் தாமாகவே உணர்வர். எனவே இதில் எனது முயற்சிகள் என்று எவையும் தேவைப்படா என்றே கருதுகின்றேன்.

இறைமையை நம்பாதவர்கள் கூட இயற்கை விதியை நம்பித்தான் ஆக வேண்டும். இதில் பார்வை வேறே தவிர பொருள் என்பது ஒன்றுதான். உலக இயக்கத்தில் அனைத்தும் நேர்த்தியாக நடக்கிறது என்பதைக் கண்கூடாகப் பார்த்தே இதைத் தெளிந்து கொள்ளலாம். ஆனால் பார்வையில்தான் ஆழம் வேண்டும். பக்குவம் உயரும் போது பார்வையின் ஆழமும் தானே உயரும்.

தன்னிறைவுக்காக வாழ்வதே மனித வாழ்க்கை; பிறருக்காக வாழ்கின்றோம் என்பது ஒரு பொய்த் தோற்றம்.

நமது வாழ்க்கை வேண்டுமாயின் பிறருக்குப் பயனாக அமையலாம். ஆனால் நாம் நமது நிறைவுக்காவே வாழ்கின்றோம் என்பதுதான் உண்மை நிலை...

விட்டுக்கொடுத்தவர்களுக்குக் கூட நான் விட்டுக்கொடுத்தேன் என்றவொரு  மகிழ்ச்சி கிடைத்திருக்கும்; அதுவே நான் கூறும் தன்னிறைவாகும்.

எனவே,
நாம் நமக்காகத்தான் வாழ்கின்றோம் என்பதே உண்மை!

ஞாயிறு, 27 நவம்பர், 2011

உளறல் 42

இன்றைய சூழலில் மிக அமைதியாக இருக்க வேண்டிய அவசியத்தை உணர்கிறேன்...

ஆழ்ந்த சிந்தனை என்னைப் பொறுமையாக செயல்பட வைத்துக்கொண்டிருக்கிறது...

எழுதுவதற்கு நிறைய விடயங்கள் இருப்பினும் மனம் எதையும் எழுத மறுக்கின்றது...


இங்கு எழுதுவது ஒரு தன்னிலை விளக்கமே!

இதனால் மற்றவர்களுக்குப் பயன் கிட்டும் என்ற எண்ணம் எனக்குத் துளியும் கிடையாது...
 
உயர்வையும் உண்மையையும் போற்றும் மனிதன் அவற்றை அன்றாட வாழ்வில் கடைப்பிடிப்பதில் மட்டும் தோல்வியுறுகின்றான்...


வாழ்க்கையின் எல்லா நிலையிலும் மனிதன் மகிழ்ச்சியைத் தேடுவதையும் அடைவதையுமே நோக்கமாகக் கொண்டிருப்பது இயல்பான ஒன்றுதான்...

சிவஞானம் தேடும் ஞானியரும் பேரின்பத்தைத் தேடியே தங்களின் தவத்தை மேற்கொள்கின்றனர்...

ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் ஒருமையுளராகி உலகியல் நடத்தல் வேண்டும் என்ற வள்ளலாரின் ஒருமைப்பாட்டுச் சிந்தனை ஓர் அழகிய கனவுதான் என்ற எண்ணமே வலுப்படுகிறது...


உலகிற்குத் தம்மைத் துறவி என அடையாளம் காட்ட விவேகானந்தருக்குக் கூட காவி உடை தேவைப்பட்டது என்பது எனக்கு வியப்பையே அளிக்கிறது...


மற்றவர்களில் நான் வேறுபட்டவன் என்பதைக் காட்டுவதற்கும் ஓர் அடையாளம் தேவை என்பதுதான் உலக நியதியா?


அனைத்தையும் துறப்பதுதான் துறவு எனின் எதையோ ஒன்றை எதிர்பார்த்துத் தவம் மேற்கொள்வது துறவாகுமா?


எது நமக்குக் கிடைக்க வேண்டுமோ அஃது இறையருளால் திண்ணமாகக் கிடைக்கும் என்பதை உணர முடிகிறது...

எதிர்பார்ப்புக்கள் இருக்கும் வரை ஏக்கங்கள் இருக்கும்; ஏக்கங்கள் இருக்கும் வரை உளப்போரட்டங்கள் தொடரும்; உளப்போராட்டங்கள் தொடரும் வரை உலக வாழ்க்கையில் முழுமையான மகிழ்ச்சியை அடைய முடியாது.


எனவே, தொடங்கிய இடத்தில் முடிவதும் முடிந்த இடத்திலிருந்து தொடங்குவதும்தான் வாழ்க்கை என்பதை உணர முற்பட்டால் நமக்கு முதலும் தெரியும்; முடிவும் தெரியும்.


மனித உறவுகள் என்பன தொடக்கம் முதல் இறுதி வரை ஒரே நிலையில் இருக்கும் என்ற எதிர்பார்ப்புத் தவறானது என்பதை ஒவ்வொருவரும் உணரும் காலம் வரும்...


அதுவரை மனிதர்களின் உளப்போராட்டங்கள் தொடரும் என்பதும் ஓர் எழுதப்படாத விதியே!


மாற்றம் என்ற சொல் மட்டுமே இறுதி வரை மாற்றம் பெறாமல் இருக்கும்; மற்ற அனைத்துமே மாற்றம் காணும் என்பதுதான் இயற்கை விதி...


மாற்றங்கள் ஒரு முடிவை எட்டும் வரை என்னால் எந்தவொரு இறுதி முடிவிற்கும் வரமுடியவில்லை...

எனவே, நான் காத்திருப்பதும்  இயற்கையான முடிவிற்கே...

 

வியாழன், 17 நவம்பர், 2011

என்னைக் கவர்ந்த குறுந்தொகைப் பாடல்...

எட்டுத் தொகை நூல்களும் பத்துப் பாட்டு நூல்களும் சங்ககால இலக்கியங்களாகத் திகழ்கின்றன. இவை சங்ககால மக்களின் காதல், வீரம், கொடை, செங்கோல் மாண்பு, மெய்யறிவு சிந்தனை முதலான இன்னோரன்ன அம்சங்களைப் பாடுகின்றன. காலத்தால் அழியாத அரும் பொக்கிஷங்களாகத் திகழும் இப்பாடல்களின் இலக்கியச் சுவையை நுகர்ந்து அனைவரும் இன்புற வேண்டும் என்பது எமது அவா. அந்த வகையில், குறுந்தொகைப் ...பாடல் ஒன்றை இங்கு தருகின்றேன்:

குறுந்தொகைப் பாடல் : எண் நாற்பது.
ஆசிரியர் செம்புலப்பெயனீரார்.
திணை - குறிஞ்சி / தலைவன் கூற்று

யாயும் ஞாயும் யாராகியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறை கேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே!

பொருள்: என்னுடைய தாயும் உன்னுடைய தாயும் முன்பின் அறிமுகமானவர்கள் அல்லர். என் தந்தையும் உன் தந்தையும் எவ்வகையிலும் உறவினர்களுமல்லர். நானும் நீயும் இதுவரைகாலம் ஒருவரை ஒருவர் அறிந்திருக்கவும் இல்லை. எனினும், செம்மண் நிலத்தில் பெய்த மழைநீர் எவ்வாறு உருமாறி பிரித்தறிய முடியாதபடி, மண்ணின் தன்மையோடு இரண்டறக்கலந்து விடுமோ அதுபோல இந்தக் கணத்தில் நம் இருவருடைய உள்ளங்களும் ஒன்று கலந்து விட்டனவே!

இப்பாடலிலே, கண்டவுடன் காதல் வசப்பட்டுவிட்ட தலைவனினதும் தலைவியினதும் மனவுணர்வு அழகிய உவமை ஒன்றினூடே வெகு இலாகவமாகச் சித்திரிக்கப்பட்டுள்ளது. முதற் பார்வையிலேயே ஆண்டாண்டு காலம் ஆழ்ந்து பழகியதான உணர்வு எழுந்துவிட்டதை, செம்மண் நிலத்தில் பெய்த மழைநீர் தானும் செந்நிறம் கொண்டு பிரித்தெடுக்க முடியாதவாறு கலந்துவிடுவது போல, அன்புகொண்ட உள்ளங்கள் இரண்டும் இரண்டறக் கலந்துவிட்டனவே என்று வியப்புணர்வோடு தலைவன் பாடுவதாக அமைத்துள்ளார், புலவர். பிற்காலத்தில் இப்பாடல்களைத் தொகுத்தவர்கள் புலவரின் பெயர் தெரியாததால் அவரை, "செம்புலப் பெயனீரார்" என்று அவர் கையாண்ட உவமையினையே காரணப் பெயராகக் கொண்டு பதிவுசெய்தமை, இந்த மனதை அள்ளும் உவமைக்குக் கிடைத்த சிறப்பு என்பதில் ஐயமில்லை அல்லவா?

வியாழன், 10 நவம்பர், 2011

உளறல் 41

நான் மனிதர்களை விட்டு அதிகம் விலகுகிறேன் என்பதை உணர்கின்றேன்...

இப்பொழுது உண்மைகள் எனக்குத் தெளிவாக உணர்த்தப்படுகின்றன என்பதை ஓரளவு உணரத் தொடங்கி விட்டேன்...

உண்மைகள் தெளிவாகத் தெரியும் போது அனைத்தையும் உதறிவிட முடியும்.
ஏனெனில் மற்றவை அனைத்தும் அந்நேரத்தில் பொருளற்றவையாகி விடுகின்றன...

வாழ்க்கை முழுமையும் நாம் மகிழ்ச்சியைத் தேடியே அலைகின்றோம்.
நமக்குக் கிடைக்கும் மகிழ்ச்சி, நமக்கு வாழ்க்கையைப் பற்றிய மறைப்பையே ஏற்படுத்துகின்றன என்பதனை மனிதன் உணராதிருக்கும் வரை அவன் வாழ்க்கை ஒரு நீண்ட தொடர்கதையே!

உலக வாழ்க்கையில் நிறைவு என்பது முழுமையாகக் கிடைக்காது என்பதே உண்மையாகும். எனவே உலகப் பற்றுகளை முழுமையாகத் துறக்கின்றவனே நிறைவை நோக்கிச் செல்ல முடியும்...

இது முயற்சியாலும் பயிற்சியாலும் கிடைக்காத ஒன்று; இறையருளால் இயற்கையாகக் கிடைக்கும்.

இந்த உலக வாழ்க்கையில் நாம் இருக்கும் வரை மற்றவர்களை நிறைவு படுத்த போலியாக வாழ வேண்டிய சூழல் ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது...
போலியை வெறுக்கும் மனம் வாழ்க்கையிலிருந்தும் விலகி நிற்க கற்பிக்கிறது என்ற உண்மையை உணர முடிகிறது...

இதன் முடிவு தெரியவில்லையெனினும் உண்மையைத் தேடும் முயற்சியும் எம்மிடம் இல்லை...

உணர்த்தப்பட வேண்டிய நேரத்தில் உண்மைகள் உணர்த்தப்படும் என்பதால் உண்மையின் வரவுக்காக அமைதியாகவே காத்திருக்கிறேன்...

அவரவர் சிந்தனைக்கு ஏற்பவே வாழ்க்கை அமையும் என்பதால் மற்றவர்களின் வாழ்க்கையின் போக்கை நம்மால் தீர்மானிக்க இயலாது என்ற உண்மையை உணர்ந்தாலும் நாம் இருக்கும் வரை,
உலகம் பயனுற வாழ முடியவில்லையெனினும் ஒரு சிலராவது பயனுற வாழ வேண்டும் என்ற எண்ணமே மேலோங்குகிறது...

சிந்திக்கத் தெரிந்த மனிதனால்தான் வாழ்க்கையின் உண்மையான பாதையில் செல்ல முடியும்...

நம்மால் வழி காட்ட முடியும்; இயலுமாயின் சிறிது தூரம் அவர்களுடன் சென்று வழி காட்டலாம்; இறுதி வரை அவர்களுடன் செல்ல இயலாது.

அவர்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு அவர்களே செல்ல வேண்டும் என்பதே இயற்கையின் நியதியாகும். வழிகாட்டிகள் வழியைக் காட்டுமே தவிர நம்மைக் கொண்டு போய் சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்க்காது என்பதை அனைவரும் உணர வேண்டும்...

எனவே, சிந்திக்கும் மனிதனே வாழத் தொடங்குகின்றான் என்ற உண்மை நமக்குத் தெரியும் வரை நாம் வாழவில்லை என்பதை உணர்ந்து கொள்வோம்.

உயர்வான சிந்தனை மனிதனுக்கு வாழ்க்கையில் நிறைவைத் தரும் என்பதால் நமது சிந்தனையும் உயர்வை நோக்கியே இருக்க வேண்டும்...

உளறல் 40

அனைவரையும் அனைத்து நிலையிலும் நிறைவுபடுத்த முடியாது என்பதை உணர முடிந்தாலும் ஓரளவாவது நிறைவுபடுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளேன்...

எனக்குத் தேடல்கள் இல்லையெனினும் மற்றவர்களுக்குத் தேவைகள் உள்ளன என்பதை நன்கு உணர்ந்தவள் என்பதால் உளப்போராட்டங்கள் மிகவே செய்கின்றன...

என் ஒருத்தியாள் பலருக்குப் பல சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதை ஏற்றுக்கொள்வதே அறமாகும்...

இவற்றிற்கானத் தீர்வுகளைத் தேடியலைய நான் விரும்பவில்லை; தொடரும் போராட்டங்கள் ஒரு தொடர்கதையே என்பதை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும்...

இறையருள் இருப்பின் தீர்வுகள் தாமே பிறக்கும்...

அதுவரை பொறுமையாகக் காத்திருங்கள் என்று கூறும் அளவுக்குத் தன்னலம் மிகுந்தவளும் அல்லள்; அதற்கான துணிவும் எனக்கில்லை; அஃது அறமுமன்று...

ஆனால், எது எப்படி நடந்தாலும் நடப்பது நடந்துதான் ஆக வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள்; மனம் ஆறுதல் கொள்ளுங்கள்.

நான் செய்தவை அனைத்தும் சரியென வாதிட வரவில்லை; அதே வேளையில் தவறென முடிவெடுக்கவும் முடியவில்லை...

அகநிலையில் இப்போராட்டம் இயல்பானதெனினும் ஏற்றுக்கொள்பவர்களின் பக்குவத்தைப் பொருத்தே தெளிவு பெற இயலும்...

எனவே, உங்கள் நிலையிலிருந்து நீங்கள் முடிவெடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் முடிவு என்னைக் கட்டுப்படுத்தாது எனினும் அறம் தன் கடமையைச் செய்வதிலிருந்து தவறாது என்பதைக் கருத்தில் கொண்டு அமைதி பெறுங்கள்...

உளறல் 39

வாழ்க்கையின் புறநிலைப் போராட்டங்களைக் கண்டு நான் அஞ்சியதில்லை; அதே வேளையில் அகநிலைப் போராட்டங்களைக் கண்டு மனம் ஓரளவு தளர்ந்தாலும் இறையருளால் அதன் எல்லையைக் காணும் வரை என் தேடல்களும் தொடர்ந்தன; என் போராட்டங்களும் தொடர்ந்தன.

ஒரு நேரத்தில் என் தேடல்கள் நின்றன; தேவைகளும் நின்றன...

ஏதோ ஒன்றுக்காக வாழ்ந்து கொண்டிருந்தேன்; ஆனால் என் மகிழ்ச்சிக்காக மட்டும் அன்று என்பதை உணரும் போது உணர்ந்து கொள்ளுங்கள்...

இந்த முடிவு என்னுடையதன்று; முதலும் முடிவும் இறைவனுடையது என்பதால் தொடக்கிய இறைவனே அதை முடித்தும் வைப்பான் என்ற எண்ணத்துடன் வாழ்க்கையைத் தொடர்கின்றேன்...

ஒரு சில முடிவுகள் ஒரு சிலருக்கு அந்நேரத்தில் துன்பத்தைத் தரலாம்; காலப் போக்கில் அனைத்துமே மறைந்துவிடும் என்பதுதான் இயற்கையின் நியதி; இதற்கு யாரும் விதிவிலக்கல்ல...

எனவே, எஃது இயற்கையின் நியதியோ அதுவே நடக்கும் என்பதை உணர்ந்து வாழ்வினைத் தொடருங்கள் என்பதே என்னுடைய தற்போதைய செய்தியாகும்...

என்னால் இப்பொழுது வாழ்வில் ஒரு விதமான நிறைவை உணர முடிகிறது...

நிறைவு என்பது ஒவ்வொரு மனிதருக்கும் வேறுபடும்...

ஒரு சிலருக்குத் தாம் சேர்த்த செல்வங்கள் நிறைவைத் தரலாம்; சிலருக்கு உயர் பதவி நிறைவைத் தரலாம்; சிலருக்கு அடைந்த புகழ் நிறைவைத் தரலாம்; சிலருக்கு படைத்த படைப்புகள் நிறைவைத் தரலாம்; சிலருக்கு சாதித்த சாதனைகள் நிறைவைத் தரலாம்...

ஆனால் இவையனைத்தும் உண்மையான நிறைவா என்றால் என்னைப் பொருத்தவரையில் இல்லையென்றே கூறுவேன்...

எனக்கு ஏற்பட்ட நிறைவு இதற்கெல்லாம் வேறுபட்டது; பொய்மைக்கும் வாய்மைக்கும் இடையில் நடந்த சத்திய சோதனையில் எனக்குக் கிடைத்த உண்மைகளே எனக்கு நிறைவைத் தந்தன...

இது தொடரும் ஒரு செயலாயினும் தற்பொதைய என் முடிவு இதுவேயாகும்; மாற்றியதும் இனி மாற்றப் போவதும் இறையருள் ஒன்றே...

உலகில் உள்ள ஒவ்வொரு பொருளும் நடக்கும் ஒவ்வொரு செயலும் நமக்கு ஏதோ ஒன்றைக் கற்றுத் தருவதால், அவையனைத்துமே போற்றுதற்குரியவையே...

எனவே ஒன்று தாழ்ந்ததென்றும் மற்றொன்று உயர்ந்ததென்றும் நம்மால் கூறவியலாது...

மனிதனுக்கு மகிழ்ச்சியான வாழ்க்கை தொடரும் வரை, நிறைவுகளும் மாறிக் கொண்டே இருக்கும்.

அது வரை அவர்களை வினைகளும் தொடரும்; விளைவுகளும் தொடரும்; ஆனால் நிறைவு மட்டும் கிடைக்காது...

நிறைவு கிடைக்க வேண்டுமாயின் நாம் மனிதர்களை விட்டு உள அளவில் விலகியே வாழ வேண்டும் அல்லது பற்றற்ற நிலையில் இருக்க வேண்டும்...
இது நடப்பது அரிது எனினும் இறையருள் கூடுமாயின் நடக்கும் என்பதே உண்மை...

சிந்தனைக்கு ...

“நீர் சுழற்சியும், வாழ்க்கை சுழற்சியும் ஒன்றுதான் என்பதை நாம் மறக்கிறோம். நீர் நிற்காது, ஓடிக்கொண்டே இருக்கும். உங்கள் கையை அதனுள் அமிழ்த்து...