திங்கள், 26 செப்டம்பர், 2011

உளறல் 33

இப்படித்தான் வாழவேண்டும் என்ற முடிவு நான் செய்ததன்று...
இஃது இயல்பாக நடந்த ஒன்று; நடந்து கொண்டிருக்கின்ற ஒன்று...
முடிவு என் கையில் இல்லை என்பதை மட்டும் உணர முடிகிறது.

ஒன்றை விரும்புவது நானாக இருக்கலாம்; ஆனால் இதைத்தான் விரும்ப வேண்டும் என்பதை நான் தீர்மானிக்கவில்லை; என்னால் தீர்மானிக்கவும் முடியவில்லை...

இயற்கையாக நடக்கும் ஒன்றுக்காகவும் நான்தான் பொறுப்பேற்க வேண்டும் என்ற நிலை...

மற்றவர்களுக்காக வாழ்கின்றோம் என்ற எண்ணமும் சிறிது சிறிதாகச் சிதைந்து வருகிறது.

நாம் நமக்காகவே வாழ்கின்றோம் என்பதுதான் உண்மை...
உள்ளத்தில் ஏற்படும் நிறைவைக் கொண்டே எதையும் தீர்மானிக்க முடிகிறது...

உள நிறைவில் வேறுபாடுகள் இருக்கலாம்; அதுவே நம்மை யார் என்று நமக்கு உணர்த்துகிறது...

மற்றவர்களால் இதை ஓரளவே புரிந்து கொள்ள முடியும் என்பதால் அவர்களால் நம்மை முழுமையாகப் புரிந்து கொள்ள இயலாது.
அதுவரை உளப் போராட்டங்கள் தொடர்வது இயல்பான ஒன்றே...

உள்ளங்கள் வேறாக இருக்கும் வரை உறவுகளில் உண்மையிருக்காது...
உள்ளங்கள் ஒன்றுபடும் போது அங்கு உறவுகளே இருக்காது; உண்மை மட்டுமே இருக்கும்...

வியாழன், 22 செப்டம்பர், 2011

உளறல் 32

முடிக்க வேண்டிய பணிகளை விரைவில் முடிக்கவும் மெய்ப்பொருள் காணவும் இறைவனின் அருள் வேண்டி நிற்கும் தருணம் இது...
உறவுகள் அனைத்தும் தாமரை இலை தண்ணீர் போல இருக்க இறைவன் அருள வேண்டும்...
இறுதி வரை நம்முடன் வருவது எதுவுமில்லை என்று தெரிந்தும் உலக வாழ்க்கையின் மீது ஏற்படும் சிறிய நாட்டம் கூட நம்மைப் பெரிதும் வருத்தி விடுகிறது. இஃது இயற்கையின் நியதி எனினும் அவாவினால் உந்தப்படும் மனிதன் அதன் போக்கிலே சென்றுதான் உண்மையை உணர வேண்டும்...


’அவன் அருளாலே அவன் தாள் வணங்கி” என்ற உயரிய உண்மை எனக்குச் சிறிது சிறிதாக உணர்த்தப்படும் தருணமென்றே இதைக் கருதுகின்றேன்...


மனித இயல்பிலிருந்து இன்னும் முழுமையாக விடுபட முடியவில்லையெனினும் அதற்கான அறிகுறிகள் தொடங்கி விட்டன என்பதை உணர்கின்றேன்...


நமக்கு ஏற்படும் அவா மட்டும் நம் வாழ்க்கையைத் தீர்மானிப்பதில்லை; நம் அன்பான உறவுகளின் அவாவும் நம் மீதே ஏற்றப்பட்டு, அதற்கான வினையையும் நாமே ஏற்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது...


தொடக்கத்தில் எதையாவது சாதிக்க வேண்டும் என்ற அவா இருந்தது. கடுமையான உழைப்பினால் சிறிது சிறிதாக வெற்றி கிட்டியபொழுது, அதன் வழி கிடைத்த பாராட்டுகளினாலும் புகழ்ச்சிகளினாலும் மயக்கம் களைந்தது...


அப்பாராட்டுகளினாலும் புகழ்ச்சிகளினாலும் மற்றவர்களின் நிறைவை உணர முடிந்தது; அதன் வழி எனக்கு ஒரு தன்னிறைவு ஏற்பட்டது என்பதுதான் உண்மை...


இப்பொழுது அதுவும் இல்லை என்பதை உணர்கின்றேன்!


இவற்றையெல்லாம் நான் ஏன் செய்தேன், எதற்குச் செய்தேன், எப்படிச் செய்தேன் என்பதை ஆழ்ந்து சிந்திக்கும் போது...
அனைத்தும் ஒரு சிலருக்காக, அன்பின் அடிப்படையிலே நான் செய்தது; அஃது மற்றவர்க்கும் நன்மை பயத்தது என்பதுதான் உண்மை...
எனவே இப்புகழ்ச்சி, பாராட்டுகள் அனைத்தும் அவர்களுக்கே போய்ச் சேர வேண்டும் என்பதே என் எண்ணமாகும்...
இதன்வழி ஏதேனும் புண்ணியங்கள் கிடைப்பின் அஃதும் அவர்களையே சாரும்...


நான் கருவி மட்டுமே...


சொல்வது கண்ணன்; செய்வது கண்ணன் என்ற கீதையின் வாசகம் நினைவுக்கு வருகிறது...
மெது மெதுவாக அதை உணரவும் முற்படுகின்றேன்...

உளறல் 31

அவ்வப்போது எனக்கு ஏற்படும் சிறிது நேர மகிழ்ச்சி கூட பறிக்கப்படுவதைப் போன்றதோர் உணர்வு எழுகிறது...
நெருக்கமானவர்களிடம் கூட துன்பத்தைப் பகிர்ந்து கொள்ள மனம் இடம் கொடுக்கவில்லை...
உண்மையைப் பேசினால் மற்றவர்களுக்குத் துன்பம் நேருமே என்ற கவலை ஒரு புறம்...
உண்மையானவர்களிடம் ஒன்றை மறைக்க நேரிடுகிறதே என்ற வருத்தம் ஒரு புறம்...
அறம் பிழைத்தோருக்கு அறமே கூற்றாகும் என்பதே உண்மையாக இருக்கும் என்று கருதுகிறேன்...
முடிவு எதுவாக இருப்பினும் அதைத் தங்கிக் கொள்ளும் மனப்பக்குவத்தை உண்மை உள்ளங்களுக்கு இறைவன் அளிக்க வேண்டும்...

என் நிலையை மற்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணமும் தற்போது எழுவதில்லை...
அவர்கள் அவர்களைப் புரிந்து கொள்ளுதலே நலம்.

வாழ்க்கை தொடர்வதும் முடிவதும் நம் கையில் இல்லை; இறைவனின் விருப்பம் எதுவோ, அதுவே நடக்கும் என்பதால் எனது பணியினைத் தொடர்கின்றேன்!

ஞாயிறு, 4 செப்டம்பர், 2011

உளறல் 30 - இங்கு எமது சில உளறல்களைப் பதிவு செய்துள்ளேன்... இவை உங்களுக்கு வழிகாட்ட அல்ல... சிந்தனைக்கு மட்டுமே...

எந்த முடிவும் எடுக்க முடியாமல் தவிக்கும் எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை...
பொய்களைக் காணும் போது ஏற்படும் மகிழ்ச்சியின் அளவை விட உண்மையைக் காணும் போது ஏற்படும் துன்பத்தின் அளவு அதிகமாக இருப்பதைத் தெளிவாக உணர முடிகிறது...

மனிதனின் தேடல்கள் தொடங்கும் போது துன்பங்களும் உடன் வரத் தொடங்குகின்றன...
நான் யாரிடமும் எதையும் எதிர்பார்க்காதவள் என்றாலும் உறவில் உண்மையை மட்டுமே எதிர்பார்த்து வாழ்ந்தவள்...

ஏதோ ஒரு மேலான உண்மை எனக்குக் காத்திருப்பதைப் போன்றதோர் உணர்வு என்னுள் எழுவதையும் ஓரளவு உணர முடிகிறது...

தொல்காப்பியரின் களவியல் ஆய்வு...

ஒத்த ஓர் பெண்ணும் ஆணும் திருமண பந்தத்தில் விழுவது என்பது இறைவனது ஆணையால் நடப்பது. அந்த களவியல்சூத்திரம் இதோ:

ஒன்றே வேறே என்றிரு பால்வயின்
ஒன்றி உயர்ந்த பாலது ஆணையின்
ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப
மிக்கோன் ஆயினும் கடிவரை இன்றே


இதற்குப் பல உரையாசிரியர்கள் பலவாறு உரை சொல்லி இருக்கும் அதே பொழுது,ஒன்றி இருத்தல் பிரிந்து வேறாகி இருத்தல் என்று எப்பொழுதும் ஆகக்கூடிய இருவகை ஆண்பெண் உறவு நிலைகளில், எல்லா வகையிலும் ஒத்த ஓர் பெண்ணும் ஓர் ஆணும் பாலதுவாக, சிவப்பிரகாச செம்பொருளாக அவர்களது உயிரோடு உயிராக நிற்கும்
அதேபொழுது வேறாகி உயர்ந்தும் நிற்கும் அதன் ஆணை வழியே தான் காண்கின்றனர் என்கின்றார். திருமண உறவில் படுப்பது இறைவனேதான், அவனேயாருக்கு யார் பொருத்தமானவர் என்று கண்டு திருமண பந்தத்தில் வீழ்த்துகின்றான் என்கின்றார். அதன் உலகியல் வெளிப்பாடுகளைக் காணும்போது,எல்லா வகையிலும் அந்த ஆண்மகன் உயர்ந்து இருப்பின் அத்திருமணம்கடியத்தக்கதல்ல என்கின்றார். இக்கருத்தில் ஆணாதிக்கக் கருத்து இருப்பதாகத் தோன்றும். அன்பர்கள் இதனைப் பற்றி இன்னும் சிந்திக்கலாம். ஆனால்முக்கியமான கருத்து திருமணம் என்பது இறைவனது ஆணையின் பேரில் நடப்பது.

வியாழன், 1 செப்டம்பர், 2011

உளறல் 29 - இங்கு எமது சில உளறல்களைப் பதிவு செய்துள்ளேன்... இவை உங்களுக்கு வழிகாட்ட அல்ல... சிந்தனைக்கு மட்டுமே...

எதிர்பார்ப்புகள் உள்ளவரை ஏக்கங்கள் இருக்கும்...
ஏக்கங்கள் உள்ளவரை மன சஞ்சலங்கள் இருக்கும்...
மன சஞ்சலங்கள் இருக்கும்வரை உளப்போராட்டங்கள் தொடரும்...
இவ்வகையில் தோன்றும் தொடங்கும் உளப்போராட்டங்களே நம்மைச் சிந்திக்க வைக்கின்றன...
ஆழ்ந்து சிந்திக்கத் தொடங்கும் மனிதனால் மட்டுமே தன் இயலாமையையும் இறைவனின் மகத்தான ஆற்றலையும் உணர முடிகிறது என்பதை என்னால் ஓரளவு உணர முடிகிறது...
இன்று தனிமையை அதிகம் விரும்பும் நிலை ஏற்பட்டது.
ஓய்வின்றிப் பணியாற்றுவதும் சில விடயங்களை மறக்கவே என்பதும் எனக்குப் புரிகிறது...
அனைத்திலிருந்தும் விடுதலை பெற மனம் விரும்பினாலும் ஏதோவொன்று தடுக்கிறது...
என் தேடல்கள் நின்றுவிட்டன என்பதும் உண்மைதான்...
ஆயினும் இறையருளால் காட்டப்படும் சில உண்மைகள் என் முந்தைய தேடல்களுக்கான விடைகளைத் தாமாகவே தருகின்றன...
தற்சமயம் நான் நானாக வாழவில்லை என்பது மட்டுமே ஓரளவு புரிகிறது...
ஆயினும் ஏதோவொன்று என்னை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது...
வாழ்க்கை நிறைவு பெற்றுவிட்டதைப் போன்ற ஓர் உணர்வு என்னுள் ஏற்படுகிறது...
எது நடந்தாலும்...என் பணிகள் முழுமை பெறவில்லை எனினும்...
அவை தொடரும் என்பதில் யாரும் ஐயம் கொள்ள வேண்டா...
என்னுடன் இருந்தவர்கள் ஒரு சிலராவது என் பணியினைத் தொடர்வார்கள்...
இஃது என் எதிர்பார்ப்பன்று; எதார்த்தம்...

சிந்தனைக்கு ...

“நீர் சுழற்சியும், வாழ்க்கை சுழற்சியும் ஒன்றுதான் என்பதை நாம் மறக்கிறோம். நீர் நிற்காது, ஓடிக்கொண்டே இருக்கும். உங்கள் கையை அதனுள் அமிழ்த்து...