ஞாயிறு, 16 அக்டோபர், 2011

உளறல் 38

ஏதோ அவ்வப்போது என் சிந்தனைக்கு வரும் சில கருத்துகளையே இங்குக் கிறுக்கி வைக்கின்றேன்...

இதைப் படிக்கின்றவர்கள் இதில் என்னைத் தேட முயல வேண்டாம்...
உங்களைத் தேடுங்கள்...
உண்மையைத் தேடுங்கள்...

இவை அனைத்தும் முடிந்த முடிவுகள் அல்ல...

ஏதோ ஒரு உளறலில்
உங்களையோ
உங்கள் அன்பிற்குரியவர்களையோ
உங்களுடன் உறவாடும் சில மனிதர்களையோ
உங்களுக்குச் சரியெனப் படும் உலகியல் உண்மைகளையோ

காண முடிந்தால்...
வாசிப்பதைத் தொடருங்கள்!

காண முடியவில்லையெனின்...
காணும் வரை காத்திருங்கள்...

வசதிகளுடன் வாழ்ந்த வரை சித்தார்த்தன் சித்தார்த்தனாகத்தான் வாழ்ந்தான்!
வசதிகளைத் தூக்கியெறிந்த பின்னரே புத்தனானான்...

இனிப்பில் வீழ்ந்து மிதக்கும் எறும்பு மகிழ்ச்சியிலே சிறிது நேரம் திளைக்கும்...
அங்குதான் அதன் இறுதி முடிவும் தொடங்குகிறது என்பதை அறியாமலே!

மகிழ்ச்சியும் மனிதனுக்கு மறைப்பை ஏற்படுத்தும் என்பதை உணராத மனிதன்
தனது முடிவைத் தனக்குத் தெரியாமலே தேடிக் கொள்கின்றான்...

வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் தானும் வாடியதாக பாடிய வள்ளலாரை எண்ணும் போது ஓர் உண்மை வெளிப்படுகிறது...
இங்கு வள்ளலாரின் இரக்க குணம் தென்படுவது உண்மைதான்...
ஆயினும் அவ்வேளையில் அவர் தெளிந்த ஞானம் பெற்றிருக்கவில்லை என்பதே உண்மை...

அவனருளாலே அனைத்தும் நடப்பதால்...
அதுவே இறைவனின் ஆணை என்பதால்...
அவனன்றி ஓர் அணுவும் அசையாது என்பதால்...

இதற்கெல்லாம் வருத்தப்பட நாம் யார் என்பதே எமது சிந்தனையாகும்...

இறுதிக்காலத்தில்தான் வள்ளலார் அனைத்தையும் புறந்தள்ளிவிட்டு,
தனித்திருந்து தெளிந்த ஞானம் பெற்றார்...

இதைக் கொண்டே அவர் படிப்படியாகவே பக்குவ முதிர்ச்சி பெற்றார் என்பதை என்னால் உணர முடிகிறது...

இதுவே அவரது வாழ்க்கைக் குறிப்புகளிலிருந்தும் பாடல்களிலிருந்தும் நான் தெரிந்து கொண்ட உண்மையாகும்...

எனவே,
என்னைப் பொருத்த வரை வாழ்க்கையில் கற்றல் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கிறது...
இவ்வுலகமெனும் பாட நூலை நாம் படித்துக் கொண்டே இருக்கின்றோம்...
இறைவன் போதித்துக் கொண்டே இருக்கிறான்...
நமது பக்குவத்திற்கு ஏற்பவே நாம் உண்மையை உணர்ந்து கொள்கின்றோம்...

நுண்ணிய நூல் பல கற்பினும் மற்றுந்தன் உண்மை அறிவே மிகும் என்ற வள்ளுவனின் வாக்கும்...

எவ்வாறு காண்பான் அறிவு தமக்கு எல்லை அவ்வாறு அருள் செய்வான் ஆதி அரன் என்ற திருமூலரின் வாக்கும்...

என்னைச் சிந்திக்க வைத்தன...
இந்த உலகம் அதுவே உண்மையென உணர்த்துகிறது...

என் அனைத்துச் செயல்களுக்கும் இறைவனே கருத்தா...
நான் கருவி மட்டுமே என்பதை உணரும் காலம் தொடங்கி விட்டதைப் போல் ஓர் உணர்வு ஏற்படுகிறது...

இஃது என் தவறுகளிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக அல்ல...

யார் செய்தாலும் தவறு தவறுதான்...

அவரவர் வினைக்கான விளைவுகளை அவரவே எதிர் கொள்ள வேண்டும் என்பதும் யாம் அறிந்த, உணர்ந்த உண்மையே!

தவறுகளுக்கான தண்டனையை ஏதோ ஒரு வகையில் பெற்றுதான் ஆக வேண்டும் என்பதே இயற்கையின் நியதி; அஃதே இறையாணையுமாகும்...

உண்மை தெரிய வேண்டுமானால் உலக வரலாற்றைப் படியுங்கள்; பாருங்கள்; உங்களைச் சுற்றியுள்ளவர்களிடம் கேளுங்கள்...

எங்குமே விடை கிடைக்கவில்லையெனின் உங்களிடமே கேட்டுப் பாருங்கள்; திண்ணமாய் விடை கிடைக்கும்...

உளறல் 37

நமது வாழ்க்கைப் பட்டறிவினை அழகிய சொற்களால் வடிவமைத்து, தொகுத்துக் கூறப்படும் கருத்துகள், மற்றவர்களால் தத்துவங்களாகப் போற்றப்படுகின்றன; ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.

அவை அனைவருக்கும் ஏற்புடையவையா என்பதை யாரும் சிந்திப்பதில்லை; சீர்தூக்கிப் பார்ப்பதில்லை.

எனக்குச் சரியாகப் படும் ஒன்று அனைவருக்குமே சரியாகப் பட வேண்டும் என்ற நிலையே கருத்தாதிக்கத்திற்கும் அடிமைச் சிந்தனைக்கும் வழிகோலுகின்றன.

இவ்வாறான சூழலில் நாம் எவ்வாறு ஒருமைப்படுவது என்ற வினா எழலாம்...
நாம் ஒருமைப்படுவதை இவ்வாறுதாம் விலக்கி வைத்திருக்கிறது இயற்கையின் நியதி என்பதை உணரும் வரை மனிதனின் உளப் போராட்டங்கள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்...

விட்டுக் கொடுத்தால் ஒருமைப்பாடு வளரும் என்பது பலரது கருத்தாகும்...
என்னைப் பொருத்தவரை விட்டுக்கொடுப்பது என்பதும் தன்னல அடிப்படையிலேதான்...

மனிதன் தன் எதிர்பார்ப்பை நிறைவேற்றிக்கொள்ளவே விட்டுக்கொடுத்துத் தனக்கு வேண்டியதைப் பெற்றுக் கொள்கிறான்...

பொருள், இன்பம், தன்னிறைவு என்று அஃது எதுவாகவும் இருக்கலாம்...

ஆனால் ஒன்றைப் பெறுவதே அடிப்படை நோக்கமாக இருக்கிறது என்பதை ஆழ்ந்து சிந்திப்பவர்களால்தாம் உணர முடியும்...

எனவே தன்னலம் இல்லாத உறவுகள் உள்ளனவா என்பதையும் ஆழ்ந்து நோக்க வேண்டும்...

தன்னலத்தில் உயர்வு, தாழ்வு என்ற நிலை வேண்டுமானால் தோன்றலாம்; தன்னலமே இல்லை என்ற நிலை தோன்ற வாய்ப்பில்லை என்றே கருதத் தோன்றுகிறது...

அப்படியாயின் யார், யாருடைய கருத்தாதிக்கத்தில் இருந்து, அக்கருத்துகளுக்கு ஆட்பட்டு வளர வேண்டும்?
யாருடைய கருத்து உயர்வானது?
யாருடைய கருத்துத் தாழ்வானது?
இதை எவ்வாறு உறுதி செய்வது?
அக்கருத்து நமக்கு ஏற்புடையதாக இருக்குமா?

மேற்கண்டஅனைத்து வினாக்களுக்கும் விடை தேட வேண்டுமெனின் குழப்பமே மிஞ்சும்...

மிகுந்த குழப்பத்திற்குப் பின் ஓரளவு தெளிவு பிறக்கலாம்; ஆனால் மீண்டும் மீண்டும் குழப்பங்கள் தோன்றிக் கொண்டே இருக்கும்...

தேடல்களும் தொடர்ந்து கொண்டே இருக்கும்...

வினையொழிவு ஏற்படும் ஒருவருக்கே தேடல்கள் இருக்காது...

முதலில் அக நிலையில் ஏற்படும் வினையொழிவு தொடர்ந்து புறநிலையில் ஏற்படும்...

முற்றாக வினையொழிவு ஏற்பட்ட பின்னரே ஒருமை நோக்கு உருவாகும்...

இங்குப் பற்றுகள் முழுமையாக அறும்...

இதனுடன் சேரும் அனைத்தும் இயல்பாகவே அத்தன்மையதாகவே ஆகிவிடும்...

கருத்தாதிக்கம், அடிமைச் சிந்தனை, அடிமைப் படுதல், கட்டுப்படுத்துதல் என்ற நிலை இங்குக் கிடையா...

வேறுபாடுகள் தோன்றா...

தீயில் போடப்படும் பொருள் தீயின் தன்மையையே பெறும் என்பதே இயற்கையின் நியதியும் இறையாணையுமாகும்...

அதுவே நாம் தேடும் செம்பொருள்...
மெய்ப்பொருள்...
சிவம்...

வெள்ளி, 14 அக்டோபர், 2011

உளறல் 36

இஃது எமக்குச் சத்திய சோதனை காலம்...

வாழ்க்கையில் பல சத்திய சோதனைகளைக் கடந்தாலும் இஃது இக்கட்டான ஒரு கால கட்டம்...

உண்மைக்கும்
நமது உறவுகளுக்கும்
நமது வாழ்க்கையுடன் பிணைந்துள்ள சமூகச் சூழலுக்கும்
நடுநிலைத் தவறாத கொள்கைக்கும்

இடையில் நடக்கும் மாபெரும் போராட்டம்...

உண்மையைத் தெரிந்து கொள்ள முடிகிறது; ஓரளவு உணரவும் முடிகிறது; ஆனால் நடைமுறைப்படுத்துவதில்தான் சிக்கல்கள் எழுகின்றன...

சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்படாத உறவுகளுக்குள்ளும் உண்மைகள் உள்ளன என்பதை அனைவராலும் புரிந்து கொள்ள இயலாது.

சிலவேளைகளில் அவை சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட உறவுகளுக்கிடையே உள்ள உணர்வுகளைவிட ஆழமானவையாகவும் பொருள் பொதிந்தவையாகவும் இருக்கும் என்பதை எல்லோராலும் ஏற்றுக்கொள்ள முடியாது...

சமூகம் ஏற்றுக்கொள்ளாத ஒன்று எப்போதுமே தவறான ஒன்றாகத்தான் இருக்கும் என்று அனைவராலும் முத்திரை குத்தப்படுகிறது.

சமூகம் கூறுவதால் மட்டுமே அவை தவறாகிவிடுமா என்பதே எமது வினா...

தவறுகளே மனிதனைப் பண்படுத்துகின்றன என்ற கருத்தை எப்பொழுதோ உணர்ந்தவளெனினும்
தவறுகள் உண்மையாகவே தவறுகள்தாமா என்பதை நாம் ஆராய வேண்டும் என்பதே ஏற்புடைய சிந்தனையாக இருக்கும் என்று கருதுகின்றேன்...

பால் இனிக்கும் என்பது அனைவரும் ஏற்றுக்கொள்ளும் உண்மையெனினும் காய்ச்சல் கண்டவனுக்கு அதே பால் புளிக்கும் என்பதும் உண்மையே என்பதை அனைவரும் மறந்து விடுகின்றோம்...

சூழலுக்கேற்ப உண்மையும் மாறுபடும் என்பதே நாம் சிந்திக்காத ஓர் உண்மையாக இருக்கிறது...

வலிகளை ஏற்றுக்கொள்ளும் மனிதர்களே மனிதர்களில் வாழ்கின்றவர்கள் என்பதால்...

இவர்கள் சத்திய சோதனைகளுக்கு ஆட்பட வேண்டும் என்பதே இயற்கையின் நியதி; இறைவனின் ஆணை....

எனவே இச்சத்திய சோதனையில் வலிகள் என்பன நம்மைப் பக்குவப்படுத்த இறைவனால் வழங்கப்பட்ட அருட்கொடை என்பதையும் உணர்கின்றேன்...
வாழ்வினைப் போராட்டங்களுக்கிடையே அமைதியாகவும் தொடர்கின்றேன்...

முதலில்,
உண்மையை உலகத்தி தேடினேன்...
பிறகு,
என்னுள் தேடினேன்...

இப்பொழுது,

இறுதி உண்மை என்னை நாடி வரும் என்பதை உணர்ந்து,
எப்பொழுது வரும் என்பதைத் தெரிந்து கொள்ள பொறுமையுடன் காத்திருக்கிறேன்!

செவ்வாய், 11 அக்டோபர், 2011

உளறல் 35

உலகில் விந்தையானவர்களே மனிதர்கள்தாம் என்பதை உணர்கின்றேன்...
உறவுகள் என்பன இயற்கையானவை; இந்த உறவுதான் வேண்டும் என்று நம்மால் முடிவெடுக்க முடியாது; அது இறையருளால் தானாகவே ஏற்படும் ஒன்றாகும்.

மனித உறவுகளே மனிதனுக்கு மகத்தான வழியினைக் காட்டுகின்றன...

உண்மைகளை நூல்களில் தேட முடியாது என்பதை இளம் வயதிலேயே உணர்ந்தவள் என்றாலும் இன்று மிகத் தெளிவாகவே உணர்கின்றேன்...

இளமைப் பருவத்தில் உலகக் கல்வியின் வாயிலாக எனக்குத் தெரிந்த உண்மையை இருபதில் மெய்கண்டாரின் சிவஞானபோதத்தின் வழி அறிந்தபோது வியப்படைந்தேன்...

உண்மையும் சிவஞானத்தைப் போல் அன்றே உள்ளது...

அதை உணர்ந்து கொள்வதே நமது பணி.
இறையருள் இருப்பின் உண்மையை நாடி நாம் செல்ல வேண்டியதில்லை; உண்மை நம்மை நாடி வரும்...

’யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன்’ என்ற வள்ளுவன் வாக்கு உண்மையெனினும் அதை நமக்கு வேண்டும் பொழுது கடைப்பிடிக்க இயலாது என்பதும் உண்மையே...

எது எப்பொழுது உணர்த்தப்பட வேண்டும் என்பது இயற்கையின் நியதி...
அதுவே இறைமையின் ஆணையாகும்...

உயர்ந்த உண்மைகள் உயர்ந்தவையே!
நம்மால்தான் அதை உணர முடியவில்லை என்பதை உணர்ந்தாலே நாம் உயர்வை நோக்கிச் செல்ல தொடங்கி விட்டோம் எனக் கொள்ளலாம்...

திருக்குறளை படித்தபோது தெரிந்து கொண்ட உண்மைகள்,
உண்மையான உறவுகளிம் மூலமே எனக்குப் பிற்காலத்தில் உணர்த்தப்பட்டன.

தெரிந்து கொள்வது வேறு, உணர்ந்து கொள்வது வேறு என்பதை மனிதன் புரிந்து கொள்ளும் நேரம் வரும் வரை அவனுக்கு அறிவுச் செருக்கு இருந்து கொண்டே இருக்கும்...
அறிவுச் செருக்கு இருக்குமிடத்தில் உண்மை ஒளிராது; ஒருவித மயக்கமே இருக்கும்.

எனவே,

"மரணம் ஒன்றுதான் வாழ்வின் நிச்சயம்' என்ற கருத்தே வாழ்க்கையின் முக்கியத் தேர்வுகளைச் செய்ய நமக்கு உதவும் என்பதை உணர்கின்றேன்...

மற்றவர்களின் கருத்து, கொள்கைகளில் சிக்கிக் கொள்ளாமல் இருக்கவும்
நம் உள்ளுணர்வு மற்றவர்களின் கருத்தாதிக்கத்தில் மறையாமல் இருக்கவும் இறைவன் அருள வேண்டும்...

வியாழன், 6 அக்டோபர், 2011

உளறல் 34

புறவாழ்க்கை தொடர்பான எண்ணங்கள் இறையருளால் ஈடேறி வருவதைக் காணும்போது வியப்பாக உள்ளது...
ஆனால் இப்பொழுது அவை மகிழ்ச்சியைத் தரவில்லை என்பதையும் உணர முடிகிறது...

நமது எண்ணங்களே வாழ்க்கையைத் தீர்மானிக்கின்றன என்பது உண்மையா?
அகவாழ்க்கையில் இஃது ஏன் நடைபெறுவதில்லை என்பது புரியாத புதிராக உள்ளது...
ஒரு வேளை தாமதித்து நடைபெறலாம் !
திண்ணமாக ஈடேறும் என்பதே இயற்கையின் நியதி என்பதால் பொறுமையுடன் வாழ்க்கையைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றேன்...
இறையருளால் எண்ணத்தின் வலிமை கூட வேண்டும்; உண்மையினை உணர வேண்டும்; அதுவே வாழ்க்கையாக வேண்டும்...

நமக்குத் தெரிந்த அளவிலும் முடிந்த அளவிலும்தான் நம்மால் சிந்திக்க முடிகிறது; முடிவெடுக்க முடிகிறது; அதுவரை அவையே நமக்கு உண்மைகளாகத் தெரிகிறது...
ஆனால் மேலான உண்மைகள் உடனடியாக உணரப்படுவதில்லை.
மேலான உண்மைகளை உணர வாழ்க்கையின் போராட்டங்களே நமக்கு உதவுகின்றன; வழிகாட்டுகின்றன.

உண்மைகள் நம்மை வெறுமையை நோக்கி நகர்த்துகின்றன என்றாலும் அவை நம்மை மேலும் மேலும் பக்குவப்படுத்துகின்றன என்பதே உண்மை...
நாம் ஒரு நிலையை அடையும் வரை தற்போதைய நிலையையே உண்மையென்று நம்புகின்றோம்; அதையே மற்றவர் மீதும் திணிக்கின்றோம்...

நமக்கு உண்மையாகப் படும் ஒன்று மற்றவர்களுக்கும் உண்மையாகத் தெரியுமா? பார்வைகள் வேறுபடும்போது பார்க்கப்படும் பொருள்களின் தன்மைகளும் வேறுபடுகின்றன; நமது பண்புகளும் வேறுபடுகின்றன.

இங்கு ஏற்படும் போராட்டங்களிலே மனிதன் மேலான உண்மைகளையும் தனது இயல்பிற்கேற்ப கீழ் நிலைக்குக் கொண்டு வந்து விடுகின்றான்; அதையே உண்மையெனவும் வாதிடுகின்றான்; வலியுறுத்துகின்றான்.

எனவே,
எது உண்மை என்று தெரிந்து கொள்ளும் வரை மேலான உண்மைகள் மேலான உண்மைகளாகவே இருக்கட்டும்...
நமது தேடல்கள் நின்ற போதிலும்
நமது ஊக்கம் குறைந்த போதிலும்
நமது முயற்சிகள் முடிவுற்ற போதிலும்
நமது ஆழமான பார்வையினால்... சிந்தனையினால்...
உண்மைகள் தாமாகவே நம்மை நாடி வரும்...

அதுவரை வாழ்க்கையுடன் போராடும் ஆற்றலை இறைவன் எனக்கு அருள வேண்டும்...

திங்கள், 3 அக்டோபர், 2011

உறவாட வேண்டும்...

உள்ளான உணர்வினிலே உன்னோடு உறவாடி
ஒவ்வொருநாளும் நான் வாழ வேண்டும்
உறவாட என்னிடம் நீ வரும்போது நான்
தடை ஒன்றும் போடாமல் காக்க வேண்டும்
அன்னையாய் என்னை நீத் தழுவிடும்போது
அழுகின்ற குழவியாய் நான் மாற வேண்டும்
தந்தையாய் என்னை நீ தட்டிக் கொடுத்திட
தாள் சேர்ந்து பணிவாக கற்க வேண்டும்
தனயனாய் எனக்கு நீ வழிகாட்டும் போது
தயங்காமல் உன் பின் செல்ல வேண்டும்
தோழனாய் என்னை நீ தோள்சேர்க்கும் போதிலே
தோள்மீது தலைசாய்ந்து கண்மூட வேண்டும்
காதலாய் என்னிடம் கனிவுடன் வரும்போது
கசிந்துருகி உன்மார்பில் தவழவேண்டும்
எத்தகைய உறவாக என்னிடம் வந்தாலும்
உள்ளான உணர்வோடு நாம் வாழ வேண்டும்!


எழுதியவர்....
'யாரோ'

ஞாயிறு, 2 அக்டோபர், 2011

காந்தி ஜெயந்தி



உலகமெலாம் போற்றுகின்ற உன்னத நாடு!
உண்மையன்பு தெய்வமென்றே உணர்ந்தொளிரும் நாடு!
பலகலைகள் பாங்காக பரந்துயர்ந்த நாடு!
'பாரதமாம்' நந்நாடாய்ப் பண்பட்ட நாடு!
... இலகிடுமோர் இமயத்தால் இசைபெருகும் நாடு!
இதிகாச காவியங்கள் இனிதொளிரும் நாடு!
நலங்கொழிக்கும் நம்நாட்டின் நயம்பெருகப் பாடு!
நாமார்க்கும் குடியல்லோம் நறும்புகழைப் பாடு!

வேதங்கள் சாத்திரங்கள் விரிவடைந்த நாடு!
விருட்சமென உபநிடதம் விண்ணுயர்ந்த நாடு!
நாதத்தின் ஓங்கார நலமறிந்த நாடு!
நாநிலத்தில் வியப்பளிக்கும் நாரதமுனி நாடு!
தீதிலாத புத்தபிரான் திறமுயர்ந்த நாடு!
தேசாபிமானத்தால் தேர்ந்ததிந்த நாடு!
ஆதிசங்கர முனிவர் அவதரித்த நாடு!
அத்வைதம் ஒன்றேதான் அழகென்ற நாடு!

மலையரணால் காட்டரணால் மதிப்புயர்ந்த நாடு
மன்னவர்கள் பலநூறாய் ஆண்டதிந்த நாடு
அயல்நாட்டார் வருகையினால் அவதிக்குள்ளாகி
அல்லலெல்லாம் உருவாகி அறங்குலைந்து போக
நிலையான செல்வமெலாம் நீசர்களின் கையில்
நிர்கதிக்கே ஆளாகி நிமிருவதும் எங்கே
அலைமோதும் நெஞ்சத்தால் அமைதியிலா நாடு
அம்மம்மா இதுஎன்ன அதிதுயரம் கூறு.

அந்நியரில் வெள்ளையரே அடிமை செய்தார் நம்மை
அன்றாட வாழ்வினிலே அளவிலாத நீளம்
தன்நிலைமை தாழத்தான் தவித்தாளே தாயே
தயவில்லா வெள்ளையரின் ஆதிக்க வெம்மை
பன்நூறு ஆண்டுகளாய் பரிதவித்தோம் நாமே
படாதபாடு பட்டுத்தான் பயந்துபோ னோமே
இன்னவாறு நடந்ததுதான் இந்தியத்தின் வாழ்வு
இதற்கோர்நல் விடிவுண்டோ எண்ணத்தின் கேள்வி.

இந்தியத்தில் குஜராத்தாம் மாநிலமாம் தன்னில்
எழுந்ததுவே புதியநிலா சத்தியவான் தன்னில்
சிந்தைகோர் இதமான விருந்தாக வந்த
செழித்தவொரு குடும்பத்தின் காந்தஒளி யாக
வ்ந்தவரே காந்தியென விவரிக்கும் தன்மை
வாதாடப் பிறந்தவொரு வழக்குரைஞர் ஆனார்
விந்தையிது விடுதலைக்கே விடிவெள்ளியாக
வேகமுடன் கரம்சந்த் காந்தியென நின்றார்.

அடிமைநிலை அகற்றிடவே அன்பேதான் ஆயுதம்
அறவழியே திறமுயர்ந்த அறிவாளர் ஆயுதம்
கொடுமைபல செய்தவர்க்கும் குளிர்முகமே ஆயுதம்
கொடுவாளை எடுத்தவர்க்கும் கும்பிடுதல் ஆயுதம்
விடுதலையாம் வேள்விக்கே விறகாக மாற்றார்
விருப்பத்தை மாற்றுவதே வழியென்று கண்டார்
கொடுஞ்செயல் புரிந்தவரும் கும்பிடத்தான் செய்ய
குவலயத்தில் காந்தியவர் கோமானாய் நின்றார்.

வெள்ளையர்கள் பணிந்திடவே கதராடை கொண்டார்
வேதனைகள் மாற்றிடவே சாதனைகள் செய்தார்
எல்லையிலாக் கொடுமையிலும் எழும்அமைதி காத்தார்
எழிலான ஆயுதமோ சத்தியமோ என்றார்
வல்லமையால் அடித்தாலும் வலிமையுடன் நின்றார்
வாக்குவாதம் செய்யாதே வாய்மையினால் வென்றார்
இல்லாத நிலைமைக்கே இங்கிலாந்து பணிய
இறைஉணர்வால் வென்றவரே இந்தியத்தின் காந்தி.

சத்தியா கிரகத்தின் மூச்சுக்கே அஞ்சி
சஞ்சலித்தார் வெள்ளையர்கள் சமாதானமாக!
உத்திகளை புதியதென உணர்ந்தெழுந்த காந்தி
உறுதிதனை உணர்ந்தவர்கள் வெள்ளையர்கள் தோற்றார்
சத்தியவான் காந்தியவர் கர்மயோகம் கண்டே
கதிகலங்கி காந்தியவர் காலடியில் வீழ்ந்தார்
சத்தியமே வென்றதனால் விடுதலை சாதித்தோம்
சமதர்ம சாதனையால் சரித்திரம் படைத்தோம்.

சிந்தனைக்கு ...

“நீர் சுழற்சியும், வாழ்க்கை சுழற்சியும் ஒன்றுதான் என்பதை நாம் மறக்கிறோம். நீர் நிற்காது, ஓடிக்கொண்டே இருக்கும். உங்கள் கையை அதனுள் அமிழ்த்து...