செவ்வாய், 11 அக்டோபர், 2011

உளறல் 35

உலகில் விந்தையானவர்களே மனிதர்கள்தாம் என்பதை உணர்கின்றேன்...
உறவுகள் என்பன இயற்கையானவை; இந்த உறவுதான் வேண்டும் என்று நம்மால் முடிவெடுக்க முடியாது; அது இறையருளால் தானாகவே ஏற்படும் ஒன்றாகும்.

மனித உறவுகளே மனிதனுக்கு மகத்தான வழியினைக் காட்டுகின்றன...

உண்மைகளை நூல்களில் தேட முடியாது என்பதை இளம் வயதிலேயே உணர்ந்தவள் என்றாலும் இன்று மிகத் தெளிவாகவே உணர்கின்றேன்...

இளமைப் பருவத்தில் உலகக் கல்வியின் வாயிலாக எனக்குத் தெரிந்த உண்மையை இருபதில் மெய்கண்டாரின் சிவஞானபோதத்தின் வழி அறிந்தபோது வியப்படைந்தேன்...

உண்மையும் சிவஞானத்தைப் போல் அன்றே உள்ளது...

அதை உணர்ந்து கொள்வதே நமது பணி.
இறையருள் இருப்பின் உண்மையை நாடி நாம் செல்ல வேண்டியதில்லை; உண்மை நம்மை நாடி வரும்...

’யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன்’ என்ற வள்ளுவன் வாக்கு உண்மையெனினும் அதை நமக்கு வேண்டும் பொழுது கடைப்பிடிக்க இயலாது என்பதும் உண்மையே...

எது எப்பொழுது உணர்த்தப்பட வேண்டும் என்பது இயற்கையின் நியதி...
அதுவே இறைமையின் ஆணையாகும்...

உயர்ந்த உண்மைகள் உயர்ந்தவையே!
நம்மால்தான் அதை உணர முடியவில்லை என்பதை உணர்ந்தாலே நாம் உயர்வை நோக்கிச் செல்ல தொடங்கி விட்டோம் எனக் கொள்ளலாம்...

திருக்குறளை படித்தபோது தெரிந்து கொண்ட உண்மைகள்,
உண்மையான உறவுகளிம் மூலமே எனக்குப் பிற்காலத்தில் உணர்த்தப்பட்டன.

தெரிந்து கொள்வது வேறு, உணர்ந்து கொள்வது வேறு என்பதை மனிதன் புரிந்து கொள்ளும் நேரம் வரும் வரை அவனுக்கு அறிவுச் செருக்கு இருந்து கொண்டே இருக்கும்...
அறிவுச் செருக்கு இருக்குமிடத்தில் உண்மை ஒளிராது; ஒருவித மயக்கமே இருக்கும்.

எனவே,

"மரணம் ஒன்றுதான் வாழ்வின் நிச்சயம்' என்ற கருத்தே வாழ்க்கையின் முக்கியத் தேர்வுகளைச் செய்ய நமக்கு உதவும் என்பதை உணர்கின்றேன்...

மற்றவர்களின் கருத்து, கொள்கைகளில் சிக்கிக் கொள்ளாமல் இருக்கவும்
நம் உள்ளுணர்வு மற்றவர்களின் கருத்தாதிக்கத்தில் மறையாமல் இருக்கவும் இறைவன் அருள வேண்டும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

சிந்தனைக்கு ...

“நீர் சுழற்சியும், வாழ்க்கை சுழற்சியும் ஒன்றுதான் என்பதை நாம் மறக்கிறோம். நீர் நிற்காது, ஓடிக்கொண்டே இருக்கும். உங்கள் கையை அதனுள் அமிழ்த்து...