வியாழன், 6 அக்டோபர், 2011

உளறல் 34

புறவாழ்க்கை தொடர்பான எண்ணங்கள் இறையருளால் ஈடேறி வருவதைக் காணும்போது வியப்பாக உள்ளது...
ஆனால் இப்பொழுது அவை மகிழ்ச்சியைத் தரவில்லை என்பதையும் உணர முடிகிறது...

நமது எண்ணங்களே வாழ்க்கையைத் தீர்மானிக்கின்றன என்பது உண்மையா?
அகவாழ்க்கையில் இஃது ஏன் நடைபெறுவதில்லை என்பது புரியாத புதிராக உள்ளது...
ஒரு வேளை தாமதித்து நடைபெறலாம் !
திண்ணமாக ஈடேறும் என்பதே இயற்கையின் நியதி என்பதால் பொறுமையுடன் வாழ்க்கையைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றேன்...
இறையருளால் எண்ணத்தின் வலிமை கூட வேண்டும்; உண்மையினை உணர வேண்டும்; அதுவே வாழ்க்கையாக வேண்டும்...

நமக்குத் தெரிந்த அளவிலும் முடிந்த அளவிலும்தான் நம்மால் சிந்திக்க முடிகிறது; முடிவெடுக்க முடிகிறது; அதுவரை அவையே நமக்கு உண்மைகளாகத் தெரிகிறது...
ஆனால் மேலான உண்மைகள் உடனடியாக உணரப்படுவதில்லை.
மேலான உண்மைகளை உணர வாழ்க்கையின் போராட்டங்களே நமக்கு உதவுகின்றன; வழிகாட்டுகின்றன.

உண்மைகள் நம்மை வெறுமையை நோக்கி நகர்த்துகின்றன என்றாலும் அவை நம்மை மேலும் மேலும் பக்குவப்படுத்துகின்றன என்பதே உண்மை...
நாம் ஒரு நிலையை அடையும் வரை தற்போதைய நிலையையே உண்மையென்று நம்புகின்றோம்; அதையே மற்றவர் மீதும் திணிக்கின்றோம்...

நமக்கு உண்மையாகப் படும் ஒன்று மற்றவர்களுக்கும் உண்மையாகத் தெரியுமா? பார்வைகள் வேறுபடும்போது பார்க்கப்படும் பொருள்களின் தன்மைகளும் வேறுபடுகின்றன; நமது பண்புகளும் வேறுபடுகின்றன.

இங்கு ஏற்படும் போராட்டங்களிலே மனிதன் மேலான உண்மைகளையும் தனது இயல்பிற்கேற்ப கீழ் நிலைக்குக் கொண்டு வந்து விடுகின்றான்; அதையே உண்மையெனவும் வாதிடுகின்றான்; வலியுறுத்துகின்றான்.

எனவே,
எது உண்மை என்று தெரிந்து கொள்ளும் வரை மேலான உண்மைகள் மேலான உண்மைகளாகவே இருக்கட்டும்...
நமது தேடல்கள் நின்ற போதிலும்
நமது ஊக்கம் குறைந்த போதிலும்
நமது முயற்சிகள் முடிவுற்ற போதிலும்
நமது ஆழமான பார்வையினால்... சிந்தனையினால்...
உண்மைகள் தாமாகவே நம்மை நாடி வரும்...

அதுவரை வாழ்க்கையுடன் போராடும் ஆற்றலை இறைவன் எனக்கு அருள வேண்டும்...

1 கருத்து:

  1. Youtube-இல் தங்களது இணையதள முகவரியை கண்டேன். உங்களது கவிதைகள் அனைத்தும் மிகவும் அருமை. என்னை மெய்சிலிர்க்க வைத்துவிட்டது. தங்களை என் தோழியாக நான் ஏற்றுகொள்ள உங்கள் அனுமதி வேண்டுகிறேன்.

    அன்புடன்,
    சா.வே. இளமாறன்

    பதிலளிநீக்கு

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

சிந்தனைக்கு ...

“நீர் சுழற்சியும், வாழ்க்கை சுழற்சியும் ஒன்றுதான் என்பதை நாம் மறக்கிறோம். நீர் நிற்காது, ஓடிக்கொண்டே இருக்கும். உங்கள் கையை அதனுள் அமிழ்த்து...